TNPSC வைத்த செக்...! இனி முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வெழுத தடை...!
போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுகள் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 2 பதவிகளுக்கான தேர்வின் மூலம் 507 காலி பணியிடங்களும், குரூப் 2 ஏ பதவிகளின் மூலம் 1,820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் தேர்வர்கள் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர். தேர்வு மையத்திலோ அல்லது வெளியிலோ விரும்பத்தகாத அல்லது ஒழுங்கீனச் செயல்களுக்கு அல்லது தீய நடவடிக்கைகளுக்கு தேர்வர் ஈடுபட்டால் விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் குறிப்பிட்ட நாட்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.
தேர்வுக்கூடத்தில் மற்ற தேர்வர்களுடன் கலந்தாலோசித்தல், விடைத்தாளினை பார்த்து எழுதுவது, தன்னுடைய வினாத்தாளுடன் கூடிய விடைப் புத்தகத்தினை பார்த்து எழுத மற்ற தேர்வர்களை அனுமதித்தல்,புத்தகம் அல்லது அச்சிடப்பட்ட, தட்டச்சு செய்யப்பட்ட மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றை பார்த்து எழுதுதல், தேர்வுக்கூடத்தில் தேர்வர்கள் வினாக்களுக்கான விடைகள் தொடர்பாக அறைக் கண்காணிப்பாளரையோ அல்லது வேறு அலுவலரின் உதவியை நாடுதல், தேர்வர்கள் தேர்வாளரை அணுகுதல் அல்லது அதற்கு முயற்சி செய்தல் அல்லது மற்றவர் மூலம் தேர்வாளரை அணுகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் விலக்கி வைக்கப்படுவர்.
ஆதரங்களான சான்றிதழ்களை போலியாக சமர்பித்தல் போன்றவற்றை செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்மாறாட்டம், தேர்வு நடைபெறுவதை முறியடிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற கடுமையான ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் நிரந்தரமாக விலக்கி வைக்கப்படுவதுடன் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.