உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய 3 அணிகள்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி தோற்கடிக்கப்பட்டால் தொடரில் இருந்து வெளியேறி விடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடியது. தொடக்க வீரர் தன்சித் ஹசன் 9 ரன்னிலும், லிட்டன் தாஸ் 23 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த ஷான்டோ – ஷகிப் அல் ஹசன் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த இணை 3 ஆவது விக்கெட்டிற்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஷகிப் 82 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து 90 ரன்னில் ஷான்டோ வெளியேறினார். பின்னர், ஆட்டத்தில் ட்விஸ்ட் ஏற்பட்டு இலங்கையின் கை ஓங்கியது. அடுத்து வந்த மஹ்முதுல்லா 22 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 255 ரன்களுக்கு வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 25 ரன்கள் தேவைப்பட்டபோது ஆட்டம் இரு தரப்புக்கும் சாதகமாக இருந்தது.
அடுத்து வந்த வீரர்கள் சுதாரித்து விளையாட 41.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதுவரை இலங்கை அணியுடன் 4 முறை மோதியுள்ள வங்கதேச அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், 3 அணிகள் இதுவரை வெளியேறியுள்ளது. 8 போட்டிகள் விளையாடி 2இல் மட்டுமே வெற்றி பெற்ற இலங்கை, வங்கதேசம் மற்றும் 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ள இங்கிலாந்து ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.