3 ஸ்டார் vs 5 ஸ்டார்..!! பணத்தை எதில் மிச்சம் செய்யலாம்..!! கரண்ட் பில் பிரச்சனையே வராது..!! உங்களுக்கு எது பெஸ்ட்..!!
இந்த கோடைக் காலத்தில் பலரும் ஏசி வாங்கலாம் என நினைப்பீர்கள். அப்படிப் பார்க்கும் போது 3 ஸ்டார், 5 ஸ்டார் என அதில் இருப்பது உங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஸ்டார் என்றால் என்ன..? உங்களுக்கு எந்த ஸ்டார் ஏசி சரியானதாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோடை வெப்பத்தைச் சமாளிக்க ஏசி நமக்குக் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. கோடைக் காலத்தில் ஏசி விற்பனை அதிகரிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் ஆஃபர்களையும் அள்ளி வீசி வருகின்றன. ஆனால், நம்மில் பலருக்கும் குழப்புவது என்றால் அது ஸ்டார் ரேட்டிங் தான். ஒரே வசதிகள் இருந்தாலும் இரு வேறு ஸ்டார்களை கொண்ட ஏசிகளுக்கு விலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதனால் பலருக்கும் ஏசி வாங்குவதில் குழப்பம் இருக்கும். பெரும்பாலும் 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசிகளுக்கு இடையே தான் குழப்பம் வரும். இரண்டிற்கும் என்ன வித்தியாசம். இதில் எது பெஸ்ட் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் என்பது ஒரு மின் சாதனம் எந்தளவுக்கு மின்சாரத்தைச் செலவிடுகிறது என்பதை அறிய பயன்படும் ரேங்கிங் சிஸ்டமாகும். பியூரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி என்ற அமைப்பு தான் இந்தியாவில் அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் இந்த ஸ்டார் ரேட்டிங்கை வழங்குகிறது. 1 முதல் 5 ஸ்டார் வழங்கப்படும். அதாவது ஒரு ஸ்டார் என்றால் மின்சாரத்தை அதிகம் இழுக்கும். 5 ஸ்டார் என்றால் குறைவான மின்சாரமே செலவாகும். அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த எளிமையான சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இரண்டு முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொண்டே ஏசிக்களுக்கு ஸ்டார் ரேட்டிங் தரப்படுகிறது. முதலில் குளிரூட்டும் திறன். ஒரு அறையைக் குளிர்விக்கும் திறனின் அளவீடு தான் இது. இதை பொதுவாக பிரிட்டிஷ் வெப்ப யூனிட்களில் (BTU) அளவெடுப்பார்கள். அடுத்து எனர்ஜி திறன் மதிப்பீடு (EER). இது ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி எந்தளவுக்கு அறையைக் குளிர்விக்க முடியும் என்பதாகும். இந்த இரண்டை வைத்துத் தான் ஸ்டார் ரேட்டிங் தரப்படுகிறது.
எளிய விளக்கம் : 1.5 டன் 3 ஸ்டார் ஏசி ஒரு மணி நேரம் ஓடினால் 1.1 யூனிட் மின்சாரம் செலவாகும். அதுவே 5 ஸ்டார் ஏசி ஓடினால் 0.84 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். மிகவும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் 3 ஸ்டார் ஏசியை நீங்கள் பயன்படுத்தும் போது ரூ.580 செலவாகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதே நீங்கள் 5 ஸ்டார் ஏசியை பயன்படுத்தினால், ரூ.500 மட்டுமே செலவாகும். இது குறைந்த தொகை போலத் தெரிந்தாலும் நீண்ட கால நோக்கில் பார்த்தால் இதுவே மிகப் பெரிய தொகையாக வந்து நிற்கும். அப்போ அனைவரும் 5 ஸ்டார் ஏசி தானே வாங்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். ஆனால், 5 ஸ்டார் ஏசி 3 ஸ்டார் ஏசியை விட காஸ்ட்லி. 1.5 டன் ஏசியில் 3 ஸ்டாருக்கும் 5 ஸ்டாருக்கும் இடையே சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை வித்தியாசம் இருக்கும்.