சத்தீஸ்கரில் பலியான நக்சலைட் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பலியான நக்சலைட் எண்ணிக்கை 13 ஆக உயர்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், துணை ராணுவப் படையினர், காவல் துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில்,இப்பகுதியிலுள்ள கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெந்த்ரா கிராமத்துக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் நக்சலைட்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
நீண்ட நேரமாக நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் உட்பட 10 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, நக்சலைட் பதுங்கியிருந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். நக்சலைட்கள் பயன்படுத்திய 303 துப்பாக்கிகள், 12 துளை துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் உட்பட பிற ஆயுதங்களையும் கண்டெடுத்தனர்.
பாதுகாப்பு படையினரின் தொடர் தேடுதல் வேட்டையின் போது, துப்பாக்கி சூடு நடந்த அடர்ந்த காட்டின் அருகே மேலும் மூன்று நக்சலைட் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.