முதல் கணவரை கொன்று 2-வது திருமணமா..? வெளிநாடு வேலைக்கு சென்றதும் 3-வது திருமணம்..!! நடந்தது என்ன..?
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கடம்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதாகும் திருப்பதி, நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்து தனது மனைவி குறித்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில் திருப்பதி கூறுகையில், "நான் 13 ஆண்டுகளாக துபாய் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தேன். 38 வயது ஆகியும் திருமணமாகாமல் இருந்தது.
இதனால், மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை உறவினர்கள் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டேன். அவர், பி.டெக் படித்திருப்பதாகவும், தன்னுடைய முதலாவது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் மூலம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் என்னிடம் கூறினார்.
இந்நிலையில், அவரது பெற்றோர் கடந்த 2023இல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை வாங்காத நிலையில் திருமண செலவுகள் அனைத்தையும் நான் தான் ஏற்றுக்கொண்டேன். எங்களுடைய 15 பவுன் நகையையும் மனைவியிடமே கொடுத்து வைத்திருந்தேன். 3 மாதம் அவருடன் வாழ்ந்த நிலையில், மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டேன்.
அங்கிருந்து எனது மனைவியிடம் தொடர்பு கொண்ட போது என்னிடம் அவர் சரிவர பேசவில்லை. இதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் வேலை பார்க்கும் போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. பின்னர், சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினேன். எனது மனைவியை தேடி ஊருக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரிக்கும்போது என்னுடனான திருமணத்தை மறைத்து 3-வதாக ஒருவரை அவர், திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.
இதுபற்றி விசாரித்த போது, அவரது முதல் கணவர் கார்த்திக் கொல்லப்பட்டு இருக்கலாம் என எனக்கு தகவல் வந்தது. ஆனால், தற்கொலை செய்து கொண்டதாக என்னிடம் நாடகமாடினர். அந்த பெண்ணின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, ஏமாற்றி 3 திருமணங்களை செய்து நகை பணத்தை அபகரித்து சென்ற பெண், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது முதல் கணவர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.