பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை...!
தொழிலாளர் நலன் - வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய திறன் மேம்பாடு - தொழில் முனைவோர் அமைச்சகத்துடன் இணைந்து, பீடித் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்துள்ளது. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2020 வரை, மொத்தம் 7262 பீடித் தொழிலாளர்களும் 2746 பீடித் தொழிலாளர்களும் முறையே பயிற்சியிலும் மாற்றுப் பணிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி, பல்கலைக் கழகம் வரை கல்வி கற்க ஆண்டொன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.25,000 வரை வகுப்பு அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில், பீடி, திரைப்பட நிலக்கரி அல்லாத சுரங்கத் தொழிலாளர்களைச் சார்ந்த 96,051 பேருக்கு நேரடிப் பண பரிமாற்றம் மூலம் ரூ.30.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு அமைச்சகங்கள், துறைகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை இ-ஷ்ரம் இணையதளம் மூலம் அணுகுவதற்கு அமைச்சகம் வசதி செய்து தருகிறது என மத்திய தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.