For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CAA-க்கு எதிரான 236 மனுக்கள்!… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை!

06:01 AM Apr 09, 2024 IST | Kokila
caa க்கு எதிரான 236 மனுக்கள் … உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை
Advertisement

CAA: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மொத்த 237 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement

பா.ஜ.க அரசு கடந்த 2019-ல் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியது. இந்த சட்டமானது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் குடியேறிய இந்து, பௌத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம், சீக்கிய மதத்தவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இங்கு தங்கியிருந்தாலே இந்திய குடியுரிமை வழங்கும். இந்த சட்டத்துக்கு அப்போதே குடியரசுத் தலைவரிடம் அவசர அவசரமாக ஒப்புதல் வாங்கிய பா.ஜ.க, அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்துக்கொண்டே இருக்கிறோம் என நான்காண்டுகளைக் கடத்திவிட்டது.

இதற்கிடையில், இந்தச் சட்டம் நிறைவேற்றிய நாள்முதல் பலரும், `இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம். மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது' என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், விதிகள் வகுக்கப்படாததாலும், அமல்படுத்தப்படாததாலும் உச்ச நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரிக்காமல் இருந்துவந்தது. இத்தகைய சூழலில், இந்த ஆண்டு தொடங்கியது முதல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று தொடர்ச்சியாகக் கூறிவந்த பா.ஜ.க, மார்ச் 11-ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவந்தது.

அதற்கடுத்த நாளே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI) ஆகியவை, இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தன. மேலும், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் தலைவர் மஹுவா மொய்த்ரா மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி உட்பட பலரும் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மொத்த 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 19ம் தேதி விசாரணைக்கு வந்தன.

பின்னர் விசாரணை தொடங்கியதும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மொத்தமாக 237 மனுக்கள் இருக்கின்றன. இதில், 20 மனுக்கள் இந்தச் சட்டத்துகெதிராக தடை கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இதில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது' என்றார். அப்போது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜெய் சிங்,வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், யாருக்கும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று துஷார் மேத்தா உறுதிமொழி அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

அதையடுத்து, எத்தனை நாள்கள் கால அவகாசம் வேண்டும்' என தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்க,நான்கு வாரங்கள் வேண்டும்' என துஷார் மேத்தா பதிலளித்தார். பின்னர், மனுதாரர் தரப்பில் தலைமை வாதங்களை முன்வைப்பது யார்?' என தலைமை நீதிபதி கேட்டபோது,நான்' என பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், `இதில் பிரச்னை என்னவென்றால், சட்டப்படி, 6 மாதங்களுக்குள் விதிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போது குடியுரிமை வழங்கப்பட்டால் அதை மாற்றுவது சாத்தியமற்றதாகிவிடும். எனவே, நான்கு வாரங்கள் அதிகம். ஏப்ரல் விடுமுறை முடிந்த உடனேயே, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

அதையடுத்து, குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படுகிறதா?' என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வியெழுப்பியபோது,அவை வழங்கப்பட்டாலும் அல்லது வழங்கப்படாவிட்டாலும், மனுதாரர்கள் எவருக்கும் பாரபட்சமாக இருக்காது' என்று துஷார் மேத்தா பதிலளிக்க, அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிடும்' என வழக்கறிஞர் ஜெய்சிங் எச்சரித்தார். இருப்பினும், நான்கு வாரங்கள் வேண்டும் என துஷார் மேத்தா மீண்டும் மீண்டும் கூற,அப்படியானால் குடியுரிமை வழங்கப்படாது என்று அறிக்கை விடுங்கள்' என கபில் சிபல் கூறினார்.

இறுதியாக, தலைமை நீதிபதி சந்திரசூட், `அவர்கள் அறிக்கை வெளியிட தயாராக இல்லை. எனவே ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்' என்று கூறி, மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்செய்யமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், 237 மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Readmore: பரபரப்பில் சென்னை!… அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம்!… பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ!

Advertisement