2024 தேர்தல்.. பிப்ரவரி 6-ம் தேதி சுற்றுப்பயணம் ஆரம்பம்...! மக்களை நேரடியாக சந்திக்க திமுக திட்டம்...!
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சுற்றுப்பயணம் பிப்ரவரி 6-ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வரும், கட்சியின் தலைவருமான ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள்,மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கையை பெறுவார்கள்.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பிப்ரவரி 5-ல் தூத்துக்குடி, பிப்ரவரி 6-ல் கன்னியாகுமரி,பிப்ரவரி 7-ல் மதுரை, பிப்ரவரி 8-ல் தஞ்சாவூர், பிப்ரவரி 9-ல் சேலம், பிப்ரவரி 10-ல் கோவை, பிப்ரவரி 11-ல் திருப்பூர், பிப்ரவரி 16-ல் ஓசூர், பிப்ரவரி 17-ல் வேலூர், பிப்ரவரி 18-ல் ஆரணி, பிப்ரவரி 20-ல் விழுப்புரம், பிப்ரவரி 21,22,23-ல் சென்னை, ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
இந்த நகரங்களுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு வருவதற்கு முன்பாக, இக்குழு வருவதை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதோடு, கோரிக்கை மனு பெறுவதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அந்ததந்த மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.