#TnGovt | இயற்கை மரணம் அடைந்தால் அரசு சார்பில் ரூ.20,000 உதவித்தொகை!! எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.
மேற்படி இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை 10ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரையும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,00,000 வழங்கப்படும். விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரையும், இயற்கை மரணம் உதவித்தொகையாக ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்,
மேலும் திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு உதவித்தொகையாக ரூ.3,000, கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக (மாதந்தோறும்) ரூ.1,000 நலத்திட்ட உதவியாக வழங்கப்படும்.
Read more ; கேரளாவில் மீண்டும் நிஃபா வைரஸ் பரவல்..!! சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை..!!