மகிழ்ச்சி...! மேயர், கவுன்சிலர்களுக்கு கௌரவ தொகை 20 % உயர்வு....! முதல்வர் அறிவிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான கௌரவ தொகை 20 சதவீதம் உயர்த்தி மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
அனைத்து நகர்ப்புற அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான கௌரவ தொகை 20 சதவீதம் உயர்த்தி மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அனைத்து மேயர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இந்த உயர்வால் பயனடைவார்கள் என்று முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார். போபாலில் நடைபெற்ற தேவி அஹில்யாபாய் ஹோல்கர் பெண் மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நகர்ப்புற அமைப்புகள் நிதி ரீதியாக தன்னிறைவு பெற உதவும் வகையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். தனது பிரிவில் வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் அதிக வருமானத்தை அதிகரிக்கும் மாநகரசபைக்கு 2 கோடி ரூபாயும், வருடம் தோறும் 5 கோடி ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இத்தொகை, அவர்கள் பரிந்துரைக்கும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, மக்கள் பிரதிநிதிகளால் கவுன்சிலர் நிதியாக பயன்படுத்தப்படும்.
மாநகராட்சி மேயருக்கான கௌரவ ஊதியம் 22,000 ரூபாயில் இருந்து 26,400 ரூபாயாக உயரும். துணைத்தலைவர் கௌரவ ஊதியம், 18,000 ரூபாயில் இருந்து, 21,600 ரூபாயாகவும், கவுன்சிலருக்கு, மாதம் 12,000 ரூபாயில் இருந்து, 14,400 ரூபாயாகவும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.