TRICHY: தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! மூச்சுத் திணறல் பாதிப்பால் பொதுமக்கள் அவதி.!
திருச்சி(TRICHY) விஸ்வாஸ் நகரில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் குடோன்களில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. 50 தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில், திருச்சியில் உள்ள விஸ்வாஸ் நகரில், பழைய பொருட்கள் வைத்திருந்த தனியார் குடோனில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள், கன்டோன்மென்ட் தீயணைப்பு சேவை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆயினும் காற்று வேகமாக அடித்ததால், அருகில் இருந்த பிளாஸ்டிக் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த மொத்த விற்பனை குடோனுக்கும் தீ பரவியது. இரண்டு குடோன்களிலும் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. கனரக இயந்திரங்களின் மூலம் குடோன்களின் ஷட்டரை உடைத்த தீயணைப்புத் துறையினர், மள மளவென கொழுந்து விட்டு எறிந்த தீயின் மீது தண்ணீரைப் பாய்ச்சினர்.
50 தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டு குடோன்களிலும் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கு இறையாக்கின. அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகையால் மூச்சுத் திணறலில் அவதிப்பட்டனர். மேலும் தஞ்சாவூர் பிரதான சாலையான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் புகை சூழ்ந்தது.
குடோன்களை சுற்றியுள்ள காலியிடங்களில், கழிவுகளை எரித்தது, இது போன்ற தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி சத்தியவர்த்தனன் தெரிவித்தார்.