வாரத்தில் 2 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும்..!! 200 வகையான பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்..!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருக்கின்றனர். இதனால் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதால், பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதாவது வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும். 200 வகை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும் என அமெரிக்க மருத்துவ சங்க இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷான் குர்ஷித் என்பவர் ஆய்வு அடிப்படையில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது. இதில், "வாரத்தின் 7 நாட்களும் தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதில் கிடைக்கும் பலனானது, வாரத்தில் ஒன்று அல்லது 2 நாட்கள் 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வதிலேயே கிடைத்துவிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய பாதிப்பு, பக்கவாத பாதிப்பு வாய்ப்புகள் இந்த தீவிர பயிற்சியால் வெகுவாக குறையும் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 90,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல வகையில் ஆரோக்கியத்தை தருகிறது. அதே போன்று, உடல் பருமன் அதிகமாக இருப்போருக்கும் இது உதவுகிறது. மேலும், சர்க்கரை நோய், இதய நோய், மனநல பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது.