2025-ம் ஆண்டு ஹஜ் பயணம்... 1,75,025 பேர் விண்ணப்பம் செய்யலாம்...! மத்திய அரசு அறிவிப்பு...!
2025- ஹஜ் பயணத்திற்காக, இந்தியாவுக்கு சவுதி அரேபியா அரசு 1,75,025 பேருக்கான ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.
முதன்முறையாக, இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்துடன் கூடுதலாக ஹஜ் சுவிதா செயலியிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஹஜ் 2025-க்கு விண்ணப்பிக்கும் யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில், இந்திய ஹஜ் கமிட்டியின் உதவி தொலைபேசி எண்ணும், சமூக ஊடகங்கள் வாயிலாக பிரத்யேக தளங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் பயணத்தை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஹஜ் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று, 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முஸ்லீம் பெண்களை மெஹ்ரம் இல்லாத பெண்கள் பிரிவின் கீழ், மெஹ்ரம் (ஆண் துணை) இல்லாமல் ஹஜ் செய்ய அனுமதிப்பதாகும். இதன் மூலம் 2024-ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக 4558 பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஹஜ்-2024-ன் போது, புனிதப் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக 'ஹஜ் சுவிதா செயலி' தொடங்கப்பட்டது.
இந்த செயலி யாத்ரீகர்களுக்கு பயிற்சி உள்ளடக்கம், தங்குமிடம் மற்றும் விமான விவரங்கள், உடைமைகள் குறித்த தகவல், அவசர உதவி எண் குறை தீர்த்தல், கருத்து, மொழி மொழிபெயர்ப்பு மற்றும் யாத்திரை தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்திய யாத்ரீகர்களுக்கு ஹஜ் புனிதப் பயணத்தின் தரத்தை மேலும் மேம்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஹஜ்-2025-க்கான ஹஜ் பயணத்திற்கான நடவடிக்கைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.