மத்திய பிரதேசம் : ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன்.. பல மணி நேர போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு..!
மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 16 மணி நேர போராட்டங்களுக்கு பிறகு மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணறு அருகே, சுமீத் மீனா என்ற 10 வயது சிறுவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் நிலைதடுமாறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு, விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை 9.30 மணி அளவில் சிறுவன் மீட்கப்பட்டான். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதற்கிடையில், ராஜஸ்தானின் கோட்புட்லியில், 700 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் இருந்து மூன்று வயது சிறுமி சேத்னாவை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது, கயிற்றில் பொருத்தப்பட்ட இரும்பு வளையத்தைப் பயன்படுத்தி சேத்னாவை மீட்கும் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்தன. புதன்கிழமை (டிசம்பர் 25) பைலிங் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, இணையான குழி தோண்டப்பட்டது. வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடர் முயற்சிகள் இருந்தும், சேத்னாவுக்கு உணவு அல்லது தண்ணீரை வழங்க முடியாமல் மீட்புப் பணியாளர்கள் தவித்து வருகின்றனர். ஆம்புலன்ஸுடன் டாக்டர்கள் குழு அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்டு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.