150 சவரன் நகை, BMW கார் எங்க..? வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய காதலன்..!! பெண் டாக்டர் தற்கொலை..!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 26 வயதான பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலையால் உயிரிழந்தார். அந்த பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கேட்ட வரதட்சணையைக் கொடுக்கவில்லை என்று காதலன் திருமணத்தை நிறுத்திய நிலையில், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். உயிரிழந்த அந்த பெண், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா என்பது தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்த அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைதும் செய்துள்ளனர். டாக்டர் ஷஹானா தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்தார். அவரது தந்தை வளைகுடாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
ஷஹானா டாக்டர் ஈஏ ருவைஸ் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், திருமணத்திற்கு டாக்டர் ருவைஸின் குடும்பத்தினர் வரதட்சணையாக 150 தங்க சவரன், 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் கேட்டதாக ஷஹானாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இவ்வளவு தர முடியாது என்று ஷஹானாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த ரூவைஸின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த இளம் மருத்துவர், தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரது அபார்ட்மெண்டில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "அனைவருக்கும் பணம் மட்டுமே தேவை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வரதட்சணை குறித்த புகார்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். வரதட்சணைக் காரணமாகக் காதலித்து வந்த இளைஞரே பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததும், இதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.