பொங்கல் பண்டிகை 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!! சொந்த ஊர் செல்வோருக்கு போக்குவரத்துத்துறை சொன்ன குட் நியூஸ்..!!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14,104 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 6 லட்சத்து 54 ஆயிரத்து 472 பேர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் 5,340 சிறப்புப் பேருந்துகளும் சேர்த்து 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.