இன்று 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை..!! ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும் 9 முதல் 12ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல வரும் 9, 10ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.