நோட்...! இவர்களுக்கு மட்டும் 12-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி கிடையாது...! பள்ளி கல்வித்துறை அதிரடி முடிவு...!
நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்; 2023-24ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 2023, மார்ச் மாதம் தேர்வு எழுதி 11-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே தயார் செய்யப்பட உள்ளது. எனவே, அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களும் நவம்பர் 3-ம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password பயன்படுத்தி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களது பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து நவம்பர் 10-ம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியப் பிறகு, அரசிதழில் பெயர் மாற்றம் செய்த மாணவரின் பெயர் மட்டும் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியப் பின்னர், மாணவர் வேறு பள்ளியில் சேர்ந்தால், அவரின் பெயர் பட்டியல் மாறியப் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால், 11-ம் வகுப்பில் படித்த பாடத்தொகுப்பு, பயிற்று மொழி, மொழிப்பாடம் ஆகியவற்றில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர் பெயரை பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், 12-ம் வகுப்பு பெயர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது.
பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரை பெயர் பட்டியில் இருந்து நீக்கமும் செய்யக்கூடாது. எனினும், பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கப்படாத, நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரை 12-ம் வகுப்பு பெயர் பட்டியலில் கட்டாயம் நீக்கம் செய்ய வேண்டும் எனில், முதன்மைக்கல்வி அலுவலரின் ஒப்புதல் கடிதத்துடன், உதவித் தேர்வு இயக்குனரிடம் சமர்பிக்க வேண்டும். பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 9498383081, 9498383075 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.