குட் நியூஸ்...! 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு... மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதி...!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, துணைத் தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாட்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வெளியிடப்படும் முடிவுகளில், மதிப்பெண்கள் மாற்றம் இல்லாத மற்றும் மறுகூட்டல் மதிப்பெண் முடிவுகளில் திருப்திகரமாக இல்லாததால், நீதிமன்றங்களை அணுகியும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாகவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு வாயிலாகவும் விண்ணப்பித்து ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாட்களின் நகல்கள் பெற்று வருகின்றனர்.
அவ்வாறு பெறப்படும் மனுதாரர்களின் விடைத்தாட்களை ஆய்வு மேற்கொள்ளும் போது விடைத்தாட்களில் மறுமதிப்பீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பினும் ஸ்கேன் (scan) மற்றும் மறுமதிப்பீட்டிற்கான அரசாணை இல்லாததாலும் / பெறப்படாததாலும் மறுமதிப்பீடு கோரும் தேர்வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது எனவும், இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வுகளின் மதிப்பெண்களே அனைத்து வகையான கல்வி பெறுவதற்கும், வேலை வாய்ப்பிற்கும் முக்கிய அடிப்படையானது என்பதை கருதி, மேல்நிலைத் தேர்வுகளுக்கும், பத்தாம் வகுப்பு தேர்விற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்த மதிப்பெண்கள் 100 என்பதால், மேல்நிலைத் தேர்வுகளுக்கு ஸ்கேன் பெறுவதற்கு கட்டணமாக ஒரு விடைத்தாளிற்கு ரூ.275/-ம், மறுகூட்டல் செய்ய ஒரு விடைத்தாளிற்கு ரூ.205/-ம் மற்றும் மறுமதிப்பீடு செய்ய ஒரு விடைத்தாளிற்கு ரூ.505 என நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தையே பத்தாம் வகுப்பிற்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேல்நிலைத் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொது மற்றும் துணைத் தேர்வர்களுக்கு விடைத்தாட்களின் ஒளி நகல் (scan copy) வழங்கவும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மேற்கொள்ளவும் உரிய ஆணை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.