சாலையோர வியாபாரிகளுக்கு சூப்பர் திட்டம்..! 10,000 முதல் ரூ.50,000 வரை பிணையம் இல்லாத மூலதனக் கடன்...!
டெல்லியில் நடைபெற்ற பிரதமர் ஸ்வநிதி மெகா முகாமில் எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தத் திட்டம் 60.94 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,678 கோடி மதிப்பில் 80.42 லட்சத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது.
முதல் தவணையில் ரூ.10,000 வரையிலும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.50,000 வரையிலும் பிணையம் இல்லாத மூலதனக் கடன் வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் சாலையோர வியாபாரிகளின் நிதி உள்ளடக்கத்திற்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார்.
2024, பிப்ரவரி 14 நிலவரப்படி, டெல்லியின் சாலையோர வியாபாரிகளிடமிருந்து 3.05 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 2.2 லட்சம் விண்ணப்பங்கள் வங்கிகளால் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.221 கோடி மதிப்புள்ள 1.9 லட்சம் கடன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இன்றைய முகாமில் 10,000 பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டால், டெல்லியில் 2 லட்சம் கடன் வழங்கல் என்ற மைல்கல்லை கடக்க முடியும்.