தூள்...! 100 நாள் வேலை... இனி வரும் காலங்களில் இவர்களுக்கு அதிகப்படியான பணி...!
100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இனி வரும் காலங்களில் அதிகப்படியான பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினரால் (TARATDAC) 16.07.2024 அன்று உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அவர்களின் தலைமையில் போராட்டக் குழு உறுப்பினர்களுடன் 12.07.2024 மாலை அன்று 03.00 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்படியாக உதவித் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அரசுச் செயலாளர். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலைக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்ட விதிகளின் படி உடனே வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பாக 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்சமயம் குறைந்த பணிகளே வழங்கப்பட்டு வருகிறது எனவும், இனி வரும் காலங்களில் அதிகப்படியான பணிகள் வழங்கப்பட உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூடுதல் இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப ரேசன் கார்டுகளை AAY அட்டையாக மாற்றி விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் ரேசன் கார்டு எண் பட்டியலை மாவட்ட வாரியாக வழங்கும் பட்சத்தில் அதனடிப்படையில் அனைவருக்கும் AAY அட்டைகளாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறாக மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அரசால் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அரசுச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.