முஸ்லிம் ஸ்டைல் மட்டன் 'தக்கடி'.! சூப்பரான ரெஸிபி உங்களுக்காக.!
முஸ்லீம் உணவு முறைகளில் ஸ்பெஷலான ஒரு உணவு என்றால் அது மட்டன் தக்கடி. பெருநாள் போன்ற விசேஷ நேரங்களில் அனேகமான இஸ்லாமிய வீடுகளில் காலை உணவாக இது சமைக்கப்படுகிறது. இந்த உணவு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்தது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. சுவையான தக்கடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தக்கடி செய்வதற்கு அரிசி மாவு 1/2 கப், சின்ன வெங்காயம் 50 கிராம், 1 பெரிய வெங்காயம், 5 பச்சை மிளகாய், 2 கப் துருவிய தேங்காய், கறிவேப்பிலை 1 கொத்து ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இந்த மட்டன் தக்கடிக்கு தேவையான மசாலா செய்வதற்கு எலும்புடன் கூடிய மட்டன் 1/2 கிலோ பெரிய வெங்காயம் 1 தேங்காய் பால் 3 ஸ்பூன் தக்காளி மசாலா 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னால் தேவையான காய்கறிகளையும் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போன பிறகு மட்டனை சேர்த்து அவற்றுடன் நன்றாக மிக் செய்து கொள்ள வேண்டும். அப்போது கறிவேப்பிலை தக்கடி மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்போது உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் துருவிய தேங்காய் கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்த பின்னர் சூடான மட்டன் குழம்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொழுக்கட்டை போன்று உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இவற்றை கொதித்துக் கொண்டிருக்கும் மட்டன் மசாலாவில் ஒவ்வொன்றாக உடையாமல் வைக்கவும். இப்போது 10 நிமிடங்கள் அதே சூட்டில் வேகவிட்டால் சுவையான மட்டன் தக்கடி ரெடி.