மார்கழி மாத கிருத்திகை விரதம்..!! இன்று முருகப்பெருமானை இப்படி வழிபட்டால் நீங்கள் வைக்கும் வேண்டுதல் முழுமையாக நிறைவேறும்..!!
முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது கிருத்திகை நட்சத்திரம். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் முருகப்பெருமான் என்பதால், அவர்களின் ஞாபகமாக இந்த கிருத்திகை அன்று யாரொருவர் முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்கிறார்களோ? அவர்களுடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த சிறப்பு வாய்ந்த கிருத்திகை நட்சத்திரம் மார்கழி மாதத்தில் வரும்போது, அதற்கு கூடுதல் சிறப்புள்ளது. அன்றைய நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.
இந்த கிருத்திகை வழிபாட்டை வீட்டில் செய்பவர்கள் 9ஆம் தேதி அதாவது இன்று மாலை 6:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள், பத்தாம் தேதி காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள், மதியம் 12:30 மணியில் இருந்து 1:30 மணிக்குள் இந்த நேரங்களில் எது உங்களுக்கு வசதியான நேரமோ அப்போது செய்யலாம். விரதம் இருப்பவர்கள் 9ஆம் தேதியான இன்று விரதம் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக வைகுண்ட ஏகாதசி வருகிறது. அன்றைய நாளும் விரதம் இருப்போம் என்பவர்கள் வைகுண்ட ஏகாதசி முடிந்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
முதலில், இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் சிலை அல்லது வேல் வேண்டும். சிலை அல்லது வேலிற்கு சுத்தமான தேனால் அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக தயிர் சாதத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வீட்டில் வேல், முருகனின் சிலை இல்லை என்றால், முருகனின் படத்திற்கு முன்பு தயிர் சாதம் வைப்பதோடு தேனையும் வைக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு 6 வெற்றிலைகளை வைத்து அதன் மேல் 6 அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும்.
பிறகு முருகப்பெருமானை முழு மனதோடு நினைத்து “ஓம் சரவணபவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதை முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். முடிந்தவர்கள் இன்றைய தினம் முருகன் ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் அதிக பலனை தரும். இந்த முறையில் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் இருப்பவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அதை முருகப் பெருமான் அருள்வார் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது. விரதம் இருக்க முடியாதவர்கள் வழிபாட்டை மட்டும் மேற்கொண்டாவது முருகப்பெருமானின் அருளை பெறலாம்.