மழையால் மூழ்கும் சென்னை..! இரவு 10 மணி வரை மழை தொடரும்..! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா..?
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல்
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் நெருங்கி வரும்பட்சத்தில் தான் தமிழக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் இதன் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், இதற்கும் தற்போது பெய்து வரும் மழைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என அறிவித்திருந்தது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போது வரை பெய்து வரும் மழையின் காரணமாக பல பகுதிகளின் சாலைகள் மழை நீரால் மூழ்கியுள்ளது, மேலும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர், மேலும் மழை 10 மணி வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மாலை முதல் மழை பெய்து வந்ததால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பியது பெரும் சிக்கலாக அமைந்தது, மேலும் மழை தொடரும் என அறிவிப்பால் நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் தற்போது வரை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.