சென்னையில் இருந்து 720 கி.மீ தொலைவில் மையம்… 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் அரக்கன்..!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புயல் உருவாகினால் சௌதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் (FENGAL) என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புயலாக வலுவடைந்து பின் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற் பகுதியை நோக்கி நகரும் எனவும், இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக அடுத்து 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 720 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்து வருவதையொட்டி மயிலாடுதுறை கடலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருக்கும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.