"மகளிர் ஓட்டு எப்போதுமே நமக்கு தான்.." மாவட்டச் செயலாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.!
தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மாநாடு சென்னை டி நகரில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் நமது அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் பெருமிதத்துடன் கூறினார். செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் உண்மையான அன்பை காண முடிகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
இனி நடைபெற இருக்கின்ற அனைத்து தேர்தல்களிலும் மகளிர் வாக்கு நமக்கு தான் எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார். அதில் கடுகளவில் மாற்றம் இருக்காது எனவும் அவர் பேசியிருக்கிறார். தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களை கழக தலைமை பார்த்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளார். நமது வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வேட்பாளர்களே என தெரிவித்த அவர் ஒரு தொகுதிக்கு இந்த நபர் தான் என்று இல்லை அதனால் உடன்பிறப்புகள் அனைவரும் கடுமையான உழைப்பை கொடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை வெற்றி கூட்டணியாக அமையச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த மாநாடு சிறப்பாக வெற்றி பெறுவதற்கும் கழக உடன்பிறப்புகள் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணிகளை எதிர்த்து நாம் பெற இருக்கின்ற வெற்றி ஜனநாயகத்தின் வெற்றியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கேஎன் நேரு உட்பட கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.