'காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை’..!! ’பணியில் 38,500 பேர்’..!! 'முழுவதும் வீடியோ பதிவு’..!! சத்யபிரதா சாஹூ தகவல்..!!
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டமாக 7-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கிடையே, ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, ”தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில், தேவைப்படும் இடங்களில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணும் பணியில் 10,000 அலுவலர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என மொத்தம் 38,500-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கும். மின்னணு வாக்குகள் எண்ணப்படும்போதே, தபால் வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும். அதே நேரம், தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, இறுதி சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.