கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி... அதிரடியில் இறங்கிய தமிழக அரசு அதிகாரிகள்...!
கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்றைய நிலவரப்படி 61 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய நபர் உட்பட இதுவரை 20-க்கும் மேற்பட்ட நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இது தவிர, நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களிலும் மது விற்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுவில் கலால் துறை, மது விலக்கு ஆயத்தீர்வை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வருவாய் துறை ஆர்டிஓ ஆகியோர் உள்ளனர். இந்த குழு, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் கிளப்கள், ஹோட்டல்களுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது