”மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது”..!! அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடு..!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதன் எதிரொலியாக மாணவ, மாணவிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் மாணவர்கள், உள்ளே வேலை செய்யக்கூடிய அலுவலர்கள் காண்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது.
மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்வது, தாமதமாக வருவதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள், அலுவலர்கள் இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அங்கிருக்கும் நிர்வாகிகளை அணுகி புகாரளிக்க வேண்டும். மேலும், பல்கலை.யில் பாலியல் சம்பவத்தை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்...
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கடந்த 23ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர், அந்த நண்பரை மிரட்டி விரட்டியடித்துவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, கோட்டூபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார்.
இதையடுத்து, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறம் பிரியாணி கடை வைத்துள்ளார். அவருக்கு தினமும் ரூ.2,000 வருமானம் கிடைக்குமாம். இந்நிலையில், பிரியாணி கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் ஞானசேகரன், அங்கு யாராவது காதலர்கள் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை வீடியோ, போட்டோ எடுத்துக் கொள்வாராம். பிறகு அவர்களிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் பணம் பறிப்பதுமாக இருந்துள்ளார். ஏற்கனவே ஒருவரிடம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவர் கைது செய்யப்பட்டார்.