”கண்டிப்பா நீங்க வரணும்”..!! திடீரென விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
ஆளுநரின் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்தளிப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்தாண்டு குடியரசு தினத்தன்று ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த நிகழ்வு இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் மீதான அதிருப்தி காரணமாக இந்தாண்டும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்.
ஆனால் கடந்தாண்டு குடியரசு தின விழா அன்று நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றாலும், திமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தான், தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பணியாற்றி வருகிறார். ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, விஜய் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் தான், ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜய் கலந்து கொள்வாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.