பிஎஃப் கணக்கில் இருந்து எல்.ஐ.சி.க்கு பணம் செலுத்தலாம்..!! எப்படி தெரியுமா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பாலிசிகள் முக்கியமான சொத்துகளாகச் செயல்படுகின்றன. இபிஎஃப் மற்றும் எல்ஐசி பாலிசிகள் இரண்டும் நீண்ட கால முதலீட்டு திட்டங்களாகும். அவை உங்கள் ஓய்வு பெறும் ஆண்டுகளில் உதவியாக இருக்கும்.
இபிஎஃப் (EPF) பங்களிப்புகள் ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதற்காகவே, எல்ஐசி பாலிசிகள் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகையின் இரட்டைப் பலன்களை வழங்குகின்றன. சில சமயங்களில் பாலிசிதாரர்கள் பல்வேறு காரணங்களால் எல்ஐசி பாலிசிகளுக்கான பிரீமியத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறிவிடுவார்கள். நிதிச் சிக்கல்கள் காரணமாக உங்களால் எல்ஐசி பிரீமியங்களைச் செலுத்த முடியவில்லை என்றால், உங்கள் இபிஎஃப் (EPF) சேமிப்பை நம்பலாம்.
எல்.ஐ.சி பாலிசியை பிஎஃப் கணக்குடன் இணைப்பது எப்படி?
எதிர்காலத்தில் பிரீமியங்களைச் செலுத்த ஒருவர் எல்ஐசி பாலிசியை பிஎஃப் கணக்குடன் இணைக்க, அருகில் உள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்தில் படிவம் 14ஐச் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, பிஎஃப் கணக்கைப் பயன்படுத்தி எல்ஐசி பிரீமியங்களைச் செலுத்த அனுமதிக்குமாறு இபிஎஃப் ஆணையரிடம் கேட்க வேண்டும்.
இருப்பினும், படிவம் 14 சமர்ப்பிப்பின் போது, PF கணக்குகளில் உள்ள நிதியானது வருடாந்திர எல்ஐசி பிரீமியம் தொகையை விட 2 மடங்கு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாலிசியை வாங்கும் போது அல்லது அதற்குப் பிறகும் இந்த வசதி கிடைக்கும். இருப்பினும், இந்த வசதி எல்ஐசி பிரீமியம் செலுத்துவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. பிற காப்பீட்டு பிரீமியங்களை பிஎஃப் கணக்கு மூலம் செலுத்த முடியாது.