மாதம் ரூ.400 கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம்...!
சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி சேலம் தளவாய்ப்பட்டி-திருப்பதி கவுண்டனுர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை(பாட்டு). நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை சேர்க்கைக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணசலுகை அளிக்கப்படுகிறது.
இசைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், தளவாய்பட்டி திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் 636302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2906197, மற்றும் 94435 39772, 9994738883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.