"நீங்க என்னைக்குமே 'பப்பு' தான்.." "பிரதமர் கனவும் பலிக்காது" - ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த ஜனதா தள எம்பி.!
ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்திலிருந்து தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநிலம் வழியாக தனது யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி தற்போது பீகார் மாநிலத்தில் யாத்திரை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் விசீ தாக்கியதில் அவரது வாகனத்தின் கண்ணாடி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது .
இந்நிலையில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜீவ் ரஞ்சன் சிங், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் விலகியதை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி " ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகள் நிதீஷ் குமாருக்கு அழுத்தம் கொடுத்தது. இதிலிருந்து அவரை பிஜேபி காப்பாற்றுவதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக" விமர்சித்திருந்தார்.
தற்போது ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங். இது தொடர்பாக தனது 'X' வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் " காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ராகுல் தெரிவித்திருப்பது பொய். வி.பி சிங் பிரதமராக இருக்கும்போதே ஜாதி வாரி கணக்கெடுப்பிற்காக குரல் கொடுத்தவர் நிதீஷ் குமார். அரசியலில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பதிவு செய்த அவர் " இந்தியா கூட்டணி குறித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க ஜனதா தள கட்சி வலியுறுத்தியது. அதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மம்தா பானர்ஜியின் கருத்தை ஆதரிப்பது போல் அமைதியாக இருந்தனர். இந்தியா கூட்டணி உடைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்" என கூறியிருக்கிறார்
இப்படியே இருந்தால் காங்கிரஸ் கட்சி மூழ்கிவிடும். உங்களது பிரதமர் கனவும் கனவாகவே முடியும். இப்போது உங்களை 'பப்பு' என்று அழைக்கிறார்கள். நீங்கள் எப்போதும் பப்புவாகத்தான் இருப்பீர்கள். இதேபோன்று உங்களது நகைச்சுவையால் நாட்டு மக்களை குஷிப்படுத்துங்கள்" என பதிவிட்டு இருக்கிறார்.