உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா.? கல்வியை அருளும் நரசிம்மர் கோவில்.!
மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒத்தகடை ஆனைமலை அடிவாரத்தில் அருள்மிகு யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த குடைவரை கோவில். கட்டிடக்கலையில் கை தேர்ந்த பல்லவர்கள் இந்த கோவிலை கட்டியதாகவும், அதன் பின் மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்கள் இந்த கோவிலை பராமரித்து வந்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலில் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் இறைவியாக நரசிங்கவல்லி இருந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
நரசிம்மர் கோவில்கள் பலவற்றுள் மிகப் பெரும் நரசிம்ம மூலவர் விக்ரகம் இந்த கோவிலில் தான் அமைந்துள்ளது. ரோமச முனிவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் சக்கர தீர்த்த குளத்தில் நீராடி விட்டு யாகம் மேற்கொண்டதாக தல புராணம் கூறுகிறது. அவர் நரசிம்ம மூர்த்தியை அவருடைய அவதார ரூபமான உக்கிர நரசிம்ம தோற்றத்தில் தரிசனம் செய்ய விருப்பப்பட்டார். அதை நிறைவேற்றும் விதமாக நரசிம்ம மூர்த்தியும் களத்தில் இறங்கினார்.
அவரது உக்கிரமான வெப்பம் உலோகங்களை அழித்துவிடுமோ என்று தேவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மகாலட்சுமிடம் சென்று உதவி கேட்க தாயார் லட்சுமி வந்து நரசிம்மரை அரவணைத்து அவரது உக்கிரத்தை போக்கியுள்ளார். அதன் பின்னர் யோக நரசிம்மராக மாறிய அவர் ரோமச முனிவரின் வரத்தை நிறைவேற்றினார். இந்த கோவிலில் தேய்பிறை பிரதோஷ காலங்களில் மிகவும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் கல்வி பயிலுகின்ற மாணாக்கர்கள் இந்த கோவிலுக்கு வந்து நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. இங்கு உள்ள நரசிங்கவல்லி தாயாரை வணங்கும்போது திருமண தடை, திருமண தாமதம், குழந்தை இன்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகளுக்கு அவர்கள் வேண்டும் வரம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இங்கு, நரசிம்மர் மற்றும் தாய் நரசிங்கவல்லி இருவருக்கும் வஸ்திரங்கள் சாற்றும் பழக்கம் இருக்கிறது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்குவதாக நம்பப்படுகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் போவது போல இந்த கோவிலில் உள்ள ஆனைமலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். பௌர்ணமி தினத்தில் தான் இந்த கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது.