WT20 WC!. இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதல்!
WT20 WC: பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பையில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. அப்போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா இதுவரை 4 முறை (2009, 2010, 2018, 2023) அரையிறுதிக்கு சென்றது. 2020ல் பைனலுக்கு முன்னேறியது. மற்றபடி ஒரு முறை கூட கோப்பை வென்றது இல்லை. கடந்த 2018 முதல் இந்திய அணி கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத்திற்கு இது, கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா, நியூசிலாந்து பெண்கள் அணிகள் இதுவரை 13 'டி-20' ல் மோதின. இதில் இந்தியா 4ல் மட்டும் வென்றது. நியூசிலாந்து 9 ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. இரு அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 1ல் தான் வென்றது. எனவே, இந்த தொடரை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கும் இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.