மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்!… இதுவரை பேசியது போதும்!… இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை!… மத்திய அமைச்சரின் அதிர்ச்சி பதில்!
மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சனைகள் தொடர்பாக இதுவரை பேசியது போதும், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், மல்யுத்த சம்மேளன தலைவருமான ப்ரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடப்பாண்டு தொடக்கத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், பிரிஜ் பூஷன் சிங் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் யாரும் போட்டியிடக்கூடாது எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய நண்பர், மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் அறிவிக்க, மத்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவும் அறிவித்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூரிடம், மல்யுத்த சம்மேளன் பிரச்னை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பேசியது போதும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் (ஹாங்சோ) மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தக் கதைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
அவர்கள் புறப்படுவதற்கு முன் (ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு) 100 பதக்கங்களை கடக்க முடியுமா என்று நான் அவர்களிடம் கேட்டேன், அவர்கள் கூட்டாக நம்பிக்கையை வெளிப்படுத்தினர், அவர்களும் அதைச் செய்தார்கள். நாங்கள் பல முக்கிய நிகழ்வுகளில் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் கடந்த ஆண்டு முதல் தாமஸ் கோப்பையை வென்றோம், மேலும் ஹாக்கி, தடகளம் மற்றும் பிற நிகழ்வுகளிலும் நாங்கள் நிறைய வெற்றிகளைக் கண்டோம். இப்போது, சாம்பியன்கள் அவர்கள் அறிவையும் அனுபவத்தையும் வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த முயற்சியை சிறப்பாகச் செய்ய முடியும்” என கூறினார்.