'உலகின் அதிவேக மனிதர்'!. 100மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற ஒலிம்பிக் வீரர் நோவா லைல்ஸ்!.
Noah Lyles: ஒலிம்பிக் 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்காவின் நோவா லைல்ஸ் 'உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமையுடன் 20 ஆண்டு கனவை நனவாக்கியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் 'ஹைலைட்டாக' ஆண்களுக்கான 100 மீ., ஓட்டம் நடந்தது. பைனலில் பங்கேற்ற 8 பேரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஓட, விறுவிறுப்பு அதிகரித்தது. அனைவரும் 10 வினாடிக்குள் 'பினிஷிங் லைனை' எட்ட, ரசிகர்கள் குழப்பமடைந்தனர். பின் 'போட்டோ பினிஷ்' முறையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். லேன் 7ல் 'புயல்' வேகத்தில் ஓடிய அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.784 வினாடி) முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.
லேன் 4ல் ஓடிய ஜமைக்காவின் கிஷேன் தாம்ப்சன் (9.789) வெள்ளி வென்றார். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 0.005 வினாடி. அதாவது ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பங்கு. அமெரிக்காவின் பிரட் கெர்லி (9.82) வெண்கலம் கைப்பற்றினார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கம் வென்ற இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்ஸ் (9.85) ஐந்தாவது இடமே பிடிக்க முடிந்தது.
நோவா லைல்ஸ் கூறுகையில்,''நீ ஜெயித்து விட்டாய் என்று கிஷேனிடம் சொன்னேன். அவரது பெயர் முதலிடத்தில் வருவதை காண தயாராக இருந்தேன். ஆனால், தங்கம் வென்றதாக எனது பெயரை அறிவித்தனர். இதை நம்ப முடியவில்லை,'' என்றார். தங்கத்தை நழுவவிட்ட தாம்ப்சன் கூறுகையில்,''ஏமாற்றமாக இருக்கிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் உள்ளது,''என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் (2021), உயரம் தாண்டுதலில் இத்தாலியின் கியான்மார்கோ டம்பேரி, கத்தாரின் முடாஸ் பர்ஷிம் பெருந்தன்மையுடன் தங்கத்தை பகிர்ந்து கொண்டனர். இருவரும் 2.37 மீ., உயரம் தாண்டினார். இதே 'பார்முலா'வை நோவா லைல்ஸ், கிஷேன் தாம்ப்சன் பின்பற்ற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து தாம்ப்சன் கூறுகையில்,''இந்த 'ஐடியா'வை லைல்ஸ் ஏற்க மாட்டார். ஏனெனில் 100 மீ., ஓட்டம் சவாலானது. கடும் போட்டி நிலவும். தங்கப்பதக்கத்தை பகிர்ந்து கொள்ள இயலாது,'' என்றார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் பிறந்தவர் நோவா லைல்ஸ், 27. இளம் வயதில் ஆஸ்துமா பாதிப்பால் சிரமப்பட்டார். பெற்றோர் வழியில் தடகளத்தில் இறங்கிய இவர், டோக்கியோ ஒலிம்பிக் 200 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். 2023ல் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீ., (9.83 வினாடி), 200 மீ., (19.52) தங்கம் வென்றார்.
நோவா லைல்ஸ் வெளியிட்ட செய்தியில்,'எனக்கு ஆஸ்துமா, அலர்ஜி, மனஅழுத்தம், பதற்றம் என பல பாதிப்புகள் உள்ளன. இவை எனது வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை. என்னால் சாதிக்க முடியும் போது. உங்களால் ஏன் முடியாது,' என தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2004ல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: வன்முறை!. இராணுவ கட்டுப்பாட்டில் வங்கதேசம்!. யார் இந்த தளபதி Waker-Uz-Zaman?