உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு தங்கம்!. 6 வயது இந்திய வீரர் அபாரம்!
Chess: உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஐதராபாத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இத்தாலியில் நடந்தது. 8 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா வீரர்கள் 123 பேர் பங்கேற்றனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் திவித் ரெட்டி அதுல்லாவும் பங்கேற்றார். 11 சுற்று முடிவில் U-8 பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டி அதுல்லா, சாத்விக் ஸ்வைன், சீனாவின் குவா ஜிமிங், என மூன்று வீரர்கள் தலா 9.0 புள்ளி பெற்றனர்.
இருப்பினும் 'டை பிரேக்கர்' ஸ்கோரில் முதலிடம் பிடித்த திவித் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இரண்டாவது இடம் பிடித்த சாத்விக் வெள்ளிப்பதக்கம் வென்றார். சீனாவின் ஜிமிங் குவோ வெண்கலம் வென்றார். 12 வயது பிரிவில் இந்திய வீரர் ஆன்ஸ் நந்தன், 4வது இடம் பிடித்தார். இதனிடையே இப்போட்டியில் பிளிட்ஸ் பிரிவிலும் திவித் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதித்து வரும் நிலையில், இந்த குட்டி வீரர் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.