கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் உற்றுநோக்கும் உலக நாடுகள்... குழப்பத்தில் மத்திய அரசு!
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கெஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று நேற்று அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பான அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்கினாவை வரவழைத்து கண்டனத்தை பதிவு செய்தது இந்தியா.
ஏற்கனவே கெஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என்று கருதுவதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி ஜெர்மனி அரசுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.