ஆபீஸ்ல வொர்க் பிரஷர்.. பணிபுரிபவரின் மனநலத்தை யோகா மூலம் மேம்படுத்த முடியுமா? - மருத்துவர் விளக்கம்
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் அளவிற்கு மக்கள் தங்கள் மனநலத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஒருவரது மனநலம் மோசமாக இருந்தால், அதன் தாக்கம் உடல்நலத்தில் நன்கு தெரியும். வேலை செய்யும் இடத்திலும் மன நலம் முக்கியம்.
உளவியலாளர் டாக்டர். சுனில் குமார் 'பணியிடத்தில் மனநலம்' குறித்து பேசியுள்ளார், அவர் கூறுகையில், "இன்று வேலை செய்வோர் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பலவிதமான கேள்விகளுடன் வேலை செய்து வருகிறார்கள். அதில் வேலை பாதுகாப்பு, ஊதிய உயர்வு, உரிமைகளை கேட்க முடியாமல் இருப்பது, பணி நிரந்தரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மனதில் இவ்வளவு கேள்விகளுடன் பணிபுரியும் ஒருவரின் மனநலத்தை மேம்படுத்த, பாதுகாக்க, வெறும் தியானம், யோகா மற்றும் பிற மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை பின்பற்றினால் முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.
பணிபுரிபவர்களின் மனநலத்தை மேம்படுத்த முதலாளிகளில் பக்கத்தில் இருந்து தொழிலாளிக்கு மனநலத்தை மேம்படுத்தும் டிப்ஸ்களையும், வழிகளையும் கொடுப்பது தான் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரின் வேலை என்று நீங்கள் நினைத்தால், அது நிஜமல்ல. தொழிலாளிகளின் பக்கத்தில் இருந்து அவர்களின் மனதை மேம்படுத்தும் மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு சரிசெய்ய ஒருவித அரசியல் ரீதியான முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.
எனவே பணியிடத்தில் மனநலம் என்பது ஒரு அரசியல் ரீதியான தீர்வை நோக்கி நகரும் போது மட்டுமே ஏற்படும். ஒரே நாளில் யோகா சொல்லித் தருவதாலோ, மனதை மேம்படுத்தும் உடற்பயிற்சி செய்வதாலோ, ஊக்கமூட்டும் பேச்சுக்களை கொடுப்பதாலோ, தொழிலாளிகளின் மனநலத்தை மேம்படுத்த முடியும் என்று நான் நம்பவில்லை. பணியிடத்தில் மனநலத்தை மேம்படுத்த வேண்டுமானால் அடிப்படை உரிமைகள், சமத்துவம், மனித உரிமைகள் காக்கப்படணும், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களின் கூட்டு கலவை தான் மனநலம்" என்று கூறினார்.
Read more ; மழைக்காலத்தில் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? தூய்மையாக வைத்திருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…