ஊழியர்களுக்கு ’Work From Home’..!! தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது, சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இதர பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும், தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.