மகளிர் உரிமைத் தொகை!! புதிய ரேஷன் கார்டுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!!
புதிய ரேஷன் அட்டைக்கு இன்று(ஜூன் 5) முதல் எளிதாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தனர். மேலும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தார்கள். தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன கார்டு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது சுமார் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் இருக்கின்றன. குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மானிய விலையிலும், விலையில்லாமலும் அரிசி சர்க்கரை, பருப்புகள், பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை இருந்தால் பல்வேறு சலுகைகள் பெறலாம். அரசு அறிவிக்கும் பொங்கல் பரிசு, நிவாரண தொகைகளை பெற முடியும்.இதுதவிர அரசின் நிதி மானியங்களையும் பெற முடியும்
மகளிர் உரிமைத் தொகை:
மிக முக்கியமான மகளிர் உரிமை தொகை வாங்க வேண்டுமானால், அவர்கள் கண்டிப்பாக குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். இதேபோல் திருமண உதவி தொகை திட்டம் மற்றும் கர்ப்பிணி உதவி தொகை திட்டத்தின் பலனை பெறவும் குடும்ப அட்டை மிக அத்தியாவசியமானது. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதால், புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமானது. அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் மாமியார், மருமகள் இருவரும் மகளிர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்பதற்காக ஒரே வீட்டில் இருந்தாலும், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த ஓராண்டில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடைமுறைகள் இன்று முதல் விலக்கி கொள்ளப்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வாங்க எளிதாக விண்ணப்பிக்கலாம். அதேபோல் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக இனி விண்ணப்பம் செய்யலாம். அல்லது இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read More: அமோக வெற்றி..!! ஜூன் 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு..?