பெண்களே உஷார்...! ஃபேஷியல் செய்த பெண்களுக்கு HIV பாதிப்பு.. அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு HIV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வேம்பையர் பேஷியல் என்பது காஸ்மெட்டிக் முறையாகும். முகத்தை பொலிவாகவும் சுருக்கம் இல்லாமலும் வைக்க இந்த பேஷியல் உதவும் என காஸ்மெட்டாலஜீஸ்ட்கள் கூறுகிறார்கள். பிரபலமான இந்த வேம்பையர் பேஷியல் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டது.
வேம்பையர் பேஷியலுக்காக பேஷியல் பெற விரும்புவோரின் உடலில் இருந்து இரத்தம் எடுக்கப்படும். இந்த இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா தனியாக பிரிக்கப்படும். பிரிக்கபட்ட பிளாசமாவை ஊசிமூலம் முகத்தில் செலுத்துவார்கள். இதுதான் வேம்பையர் பேஷியலின் செயல்முறையாகும்.
தனது அழகை பராமரிக்கவும் மேம்படுத்தவும் பெரும்பாலானோர் இந்த வாம்பயர் ஃபேஷியல் பக்கம் திரும்பியுள்ளனர். பெரும்பாலும் பெண்களே இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தான் வாம்பயர் ஃபேஷியல் செய்துகொண்ட 3 பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பயன்படுத்தியதன் மூலம் இந்த தவறு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு உரிமம் பெறாத ஸ்பாவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்க சுகாதார நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முறையான உரிமங்கள் இல்லாமல் இயங்கியதற்காகவும், பாதுகாப்பான தொற்றுக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காகவும் இந்த ஸ்பா 2018 -ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்ததற்காக அதன் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார். இந்த ஸ்பாவில் வாம்பயர் ஃபேஷியல் செய்தபின், 2018 ஆம் ஆண்டில் ஒரு முன்னாள் வாடிக்கையாளர் எச்.ஐ.வி.க்கு பாதிக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், சில வாடிக்கையாளர்கள் ஸ்பாவிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே எச்.ஐ.வி.க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மூலக் காரணிகள் எதுவும் தெரியவில்லை என அறிக்கை கூறுகிறது.
CDC மற்றும் சுகாதாரத் துறை விசாரணையில் 59 ஸ்பா வாடிக்கையாளர்கள் ஸ்பாவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இதில், 20 பேர் வாம்பயர் ஸ்பாவைப் பெற்றனர், மீதமுள்ளவர்கள் போடோக்ஸ் போன்ற சேவைகளுக்காக ஊசிகளைப் பெற்றுள்ளனர்.