ஹெலிகாப்டரில் இருந்து கார் மீது பட்டாசு வெடித்த பெண்கள்!… வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் கைது!
Lamborghini: லம்போர்கினி கார் மீது ஹெலிகாப்டரில் இருந்து இரண்டு பெண்கள் பட்டாசு வெடித்து தாக்குவது தொடர்பான வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் அலெக்ஸ் சோய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் அலெக்ஸ் சோய். 24 வயதே ஆன இவர் ஏறக்குறைய 1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ கவுண்டியில் உள்ள எல் மிராஜ் என்ற வறண்ட ஏரிப் படுக்கையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிரபல யூடியூபரான அலெக்ஸ் சோய், தனது யூடியூப் சேனல் மற்றும் இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, அந்த வீடியோவில் ஹெலிகாப்டரில் இருந்து 2 பெண்கள், லம்போர்கினி கார் மீது பட்டாசுகள் வீசி தாக்குதல் நடத்தும் விதமாக இருந்தது.
"Destroying a Lamborghini with Fireworks" என்ற தலைப்பில் கிட்டத்தட்ட 11 நிமிட வீடியோவை படமாக்கி கடந்த ஜூலை மாதம் வீடியோ பகிரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் இருந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இதையடுத்து, பிரபல யூடியூபர் சோய் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்தின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிரமாணப் பத்திரத்தின்படி, விமானத்தில் வெடிக்கும் அல்லது தீக்குளிக்கும் சாதனத்தை வைத்திருப்பதற்கு எதிரான சட்டத்தை மீறியதாகக் கூறப்பட்டது. இதுபோன்ற வீடியோக்களை எடுப்பதற்கு தேவையான அனுமதிகளை சோய் பெறவில்லை என்றும் அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட வேறு எந்த நபர்களின் பெயரும் இல்லை என்றும் இந்த ஸ்டண்டின் விளைவாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக கடந்த வியாழன் அன்று நீதிமன்றத்தில் யூடியூபர் சோய் ஆஜரானார். இதனை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
Readmore: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை- மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் காயம்