பெண்களே உஷார்!!! வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நடக்கும் மோசடி..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள சொரையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான அலமேலு. இவருக்கு தேவராஜ் என்ற கணவர் உள்ளார். தேவராஜ், கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர், உனது வீட்டில் பூஜை செய்தால் உன் கணவரின் உடல் நிலை சரியாகி விடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய அலமேலு, அந்த நபரை தனது வீட்டில் பூஜை செய்ய அனுமதித்துள்ளார்.
பூஜையின் போது, அந்த நபர் அம்மனுக்கு தங்க நகை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அலமேலு, தனது காதில் இருந்த 2 கிராம் கம்மலை கழற்றிக் கொடுத்துள்ளார். உடனே அந்த மர்ம ஆசாமி, பூஜை முடித்து விட்டு மாலை வந்து தருவதாக கூறி கம்மலை எடுத்து சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அப்போது தான், அலமேலு தான் ஏமாற்றப் பட்டத்தை அறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அலமேலு, சம்பவம் குறித்து மணலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் காளியப்பன் என்பது தெரியவந்தது. இவர் பூஜை செய்வதாக கூறி தனியாக இருக்கும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்வதையே வேலையாக வைத்துள்ளார். மேலும் இவர் தான் அலமேலுவிடம் நகையை பறித்துச் சென்றது என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் காளியப்பனை கைது செய்து, ஒரு பைக், 3 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Read more: “விஜய்யை பிரிந்து சென்ற சங்கீதா…” பத்திரிகையாளர் அளித்த பரபரப்பு பேட்டி.. சோகத்தில் ரசிகர்கள்..