Pakistan | அரபு எழுத்தா.? அல்லது குர்ஆன் வசனமா.? அரபிக் எழுத்துக்களுடைய ஆடை.! சிக்கலில் சிக்கிய பெண்.!
பாகிஸ்தானில்(Pakistan) அரேபிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடை அணிந்த பெண், புனித நூலான குர்ஆனின் வசனங்களை அணிந்துள்ளதாக தவறாக கருத்திய கும்பலால் தாக்கப்பட்டார். சமூக ஊடகங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டு, வைரலான நிலையில் அதனை கண்டவர்கள் அது வெறும் அரபு வார்த்தைகளே, குர்ஆன் வசனங்கள் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் இருந்த பெண் காவல் அதிகாரி ஒருவர், கூட்டத்தை சமாதானப்படுத்தி அந்த பெண்ணை பத்திரமாக அழைத்து சென்றுள்ளார். அந்தக் காவல் அதிகாரியின் இந்த செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.
பாகிஸ்தானின்(Pakistan) லாகூரில் தன் கணவருடன் கடைக்கு சென்று இருந்த ஒரு பெண், அரபி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார். அங்கிருந்தவர்கள் அதனை குர்ஆனின் வசனங்கள் என்று தவறாக கருதி அந்தப் பெண்ணை தாக்கினர். பயந்து போன அந்த பெண் ஒரு கடைக்குள் ஓடிச் சென்று முகத்தை மூடியபடி அமர்ந்து கொண்டார். ஆத்திரத்துடன் ஒரு கும்பல் அந்த கடை முன் நின்று கத்திக் கொண்டிருந்ததை வீடியோவாக சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
ஏஎஸ்பி சையதா ஷெர்பானோ நக்வி என்ற பெண் காவல் அதிகாரி, சம்பவ இடத்திற்கு சென்று அந்த கூட்டத்தினரை சமாதானம் செய்ய முற்பட்டார். அந்த பெண்ணை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார். இந்த வீரச் செயலுக்காக, பஞ்சாப் காவல்துறை, அவரது பெயரை பாகிஸ்தானின் சட்ட அமலாக்கத்திற்கான மிக உயரிய வீர விருதான, மதிப்புமிக்க குவாய்ட்-இ-ஆஸாம் காவல் பதக்கத்திற்கு (QPM) பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில் பல 'X பயனர்கள்' தங்களது சமூக வலைத்தளங்களில், அந்த சட்டையில் பொறிக்கப்பட்டிருந்தது அரபி எழுத்துக்களே, குர்ஆனின் வசனங்கள் அல்ல என்று தங்களது கருத்துக்களை, அந்த பெண்ணுக்கு ஆதரவாக தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், காவலில் வைக்கப்பட்ட பிறகு, தான் யாரையும் கோபப்படுத்தும் நோக்கில் அந்த ஆடை அணியவில்லை என்றும், இனிமேல் அந்த ஆடையை எப்பொழுதுமே அணியப் போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார். அணிந்திருந்த ஆடையால் ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளானது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.