எண்ணெய்யை கொதிக்க வைத்து, தூங்கும் கணவர் மீது ஊற்றிய மனைவி... காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்..
காஞ்சிபுரம் மாவட்டம், புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. மீன் வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வரும் ரவி, தனது மனைவியிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனது கணவனின் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத ஜெயந்தி, சமையல் எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, தூங்கிக் கொண்டு இருந்த ரவி மீது ஊற்றி உள்ளார்.
இதனால் பலத்த காயம் அடைந்த ரவி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ஜெயந்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது கணவர் செய்த கொடுமைகளை தாங்க முடியாமல் இதுவரை இரண்டு முறை கணவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியுள்ளார். இதன்படி, ஒருமுறை சாப்பாட்டில் விஷம் வைத்தும், மற்றொரு முறை பீரோவை தள்ளிவிட்டும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த முயற்சிகளில் இருந்து ரவி தப்பியதால், கொதிக்கும் எண்ணெய்யை அவர் மீது ஊற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.