Election 2024: "அதிமுக இல்லைனா பாஜக யாருக்கும் தெரிந்திருக்காது"… எடப்பாடி பழனிச்சாமி பதிலடி.!!
Election 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் பாண்டிச்சேரி உட்பட பல பகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த தேர்தல்களில்(Election) ஒரே அணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை எதிரெதிர் அணிகளாக தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் ராம சீனிவாசன் என்பவர் அதிமுக கட்சியையும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர் எடப்பாடி எல்லாம் ஒரு ஆளுமையா என்று கேள்வி எழுப்பினார் .
மேலும் அதிமுக கட்சி வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு அழிந்து விடும் எனவும் கூறினார். இவரது பேச்சுக்கள் அதிமுக தொண்டர்களிடையே பாத்திரத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் சிதம்பரம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக வேட்பாளரின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி தங்கள் கட்சியை அழிந்து போகும் என்று சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார் .
மேலும் தாங்கள் சொகுசாக நடந்து கொண்டு அரசியல் செய்பவர்கள் அல்ல என்று கூறிய அவர் 50 வருடங்களுக்கும் மேலாக கட்சிக்காக கடினமாக உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக போன்று விளம்பரத்தில் அரசியல் செய்யும் பழக்கம் அதிமுகவிற்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1998 ஆம் வருடத் தேர்தலின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா அறிமுகப்படுத்தியதால் தான் இன்று பாஜக தமிழ்நாட்டில் இருக்கிறது. இல்லையென்றால் மக்களுக்கு பாஜக என்ற ஒரு கட்சி இருந்ததே தெரிந்திருக்காது என கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.