Pudhucherry: ஒரு வாரத்துக்குள் 9 வயது சிறுமிக்கு நீதி கிடைக்க வழி செய்வேன்...! ஆளுநர் அதிரடி
சிறப்பு விரைவு நீதிமன்றம் உடன் அமைத்து ஒரு வாரத்துக்குள் 9 வயது சிறுமிக்கு நீதி கிடைக்க வழி செய்வேன் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவை முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மக்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. மக்களின் கோபம் இன்று புதுவையில் பல்வேறு இடங்களில் போராட்டமாக வெடித்தது.
சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கடற்கரைச் சாலை காந்தி சிலை முன்பு இன்று கூடினர். அவர்கள், "குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும். நீதி வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர்.
புதுச்சேரியில் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "நான் நிலைக்குலைந்து போயுள்ளேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இதில் சலுகை கிடையாது. அரசிடம் பேசி, வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் உடன் அமைத்து ஒரு வாரத்துக்குள் அக்குழந்தைக்கு நீதி கிடைக்க வழி செய்வேன். பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்துவேன். ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வரும்" என்றார்.