பரபரப்புச் செய்தி: "இன்னும் 7 நாட்கள் தான்.." அமலுக்கு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம்.! அமைச்சர் சாந்தனு தாக்கூர் உறுதி.!
மேற்கு வங்காளத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இன்னும் 7 நாட்களில், அமலுக்கு வரும் என்று பாஜகவின் மக்களவை எம்.பியான சாந்தனு தாக்கூர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அமைச்சரான சாந்தனு தாக்கூர், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், "ராமர் கோவில் திறக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஏழு நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் எனப்படும் CAA நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இன்னும் ஒரே வாரத்தில், இது அமலுக்கு வரும்", என்று கூறி உத்தரவாதம் அளித்துள்ளார்.
நரேந்திர மோடியின் அரசால் இந்த சட்டம் 2019இல் இயற்றப்பட்டது. இது பலரிடமும் எதிர்ப்பை பெற்றது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் டிசம்பர் 31, 2014 வரை இந்தியாவிற்கு வந்த வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் - துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 2019, டிசம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் CAA நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றது. இதனை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற கையேட்டின்படி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற எந்த ஒரு சட்டத்திற்கும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் விதிகள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். அது லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் துணைச் சட்டங்களுக்கான குழுக்களிடமிருந்து நீட்டிப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
உள்துறை அமைச்சகம், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், இந்த சட்டத்திற்கான விதிகளை இயற்றுவதற்காக, நாடாளுமன்ற குழுக்களிடமிருந்து அவ்வப்போது நீட்டிப்பை பெற்று வருகிறது. இதற்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவதற்காக 30க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஒன்பது மாநில உள்துறை செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்து, முஸ்லீம் அல்லாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 1,414 வெளிநாட்டினருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.